லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனாவிற்கு இந்தியாவின் சார்பில் சுமார் 15 டன் அளவிற்கு மருந்து பொருட்கள் அளித்து உதவி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மாஸ்க்குகள், 5லட்சம் கையுறைகள் உட்பட சுமார் ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் ஹூபேய் சாரிட்டி பெடரேஷன் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதும் சீன அதிபரிடம் தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி கூறினார். இதனையடுத்து கடந்த பிப்., 26ம் தேதி இந்திய விமானப்படை விமானம் சி-17 விமானம் மூலம் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் ஜன.,31, பிப்.,1 மற்றும் பிப்.,26 ஆகிய தேதிகளில் வூஹானில் இருந்து மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என 766 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 723 பேர் இந்தியர்கள். இவர்களை தவிர 43 வெளிநாட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 23 பேர் வங்க தேசம், 9 பேர் மாலத்தீவு, 2 பேர் மியான்மர், தென்ஆப்ரிக்கா, மடகாஸ்கர், உள்ளிடநாடுகளைசேர்ந்த தலா ஒருவர் அழைத்து வரப்பட்டுள்ளனர். என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.